சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்.. தெலங்கானா முதல்வர் மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்..

தெலங்கானா சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு, சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) கொண்டு வந்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளிலிருந்து 2015ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதே போல், தெலங்கானா சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஐதராபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது:
கூட்டாட்சி முறையில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்தியாக வேண்டும். இதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. ஆனால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், சில்லறை அரசியலில் ஈடுபடுகிறார்.

சிறுபான்மை மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசியின் அழுத்தம் காரணமாகவே இந்த தீர்மானத்தை அவர் கொண்டு வருகிறார். அசாதீன் ஓவைசி, மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார். அவர் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். இதற்கு சந்திரசேகரராவ் அடிபணியாமல், தீர்மானம் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

You'r reading சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்.. தெலங்கானா முதல்வர் மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி.. தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்