ரூ.700 கோடியில் கட்டப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி..

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். இவர்கள் பிப். 24ம் தேதி காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேருகின்றனர். விமான நிலையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, அவர்கள் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்கிறார்கள். பகல் 12.15 மணிக்கு அங்குச் செல்லும் அவர்கள் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்து, காந்தியின் அடையாளங்களைப் பார்வையிட்டு விட்டுப் புறப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்திற்கு செல்கிறார். அவர்களுக்கு வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பகல் 1.05 மணிக்கு ஸ்டேடியத்திற்கு செல்லும் டிரம்ப், அங்குப் பிரம்மாண்டமாக நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருடன் நமது பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஹவ்டி மோடி என்ற பெயரில் டெக்சாஸில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் டிரம்ப்பும் பங்கேற்றார். அதே போன்று, இப்போது நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், சர்தார் படேல் ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டுள்ள மோட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியம் முதன் முதலில் 1982ல் கட்டப்பட்டது. அப்போது இந்த ஸ்டேடியத்தில் 49 ஆயிரம் பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாக இருந்தது. பிரதமர் மோடி இந்த ஸ்டேடியத்தை இடித்து விட்டு, உலகிலேயே பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்குத் திட்டமிட்டார்.
அதன்படி, ரூ.700 கோடி மதிப்பீட்டில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 2 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. இது வரை உலகிலேயே பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்து வந்தது. தற்போது அதை இந்த சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் மிஞ்சி விட்டது. இந்த புதிய ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கலாம்.
இந்த புதிய ஸ்டேடியத்தில் முதல் நிகழ்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இருவருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

You'r reading ரூ.700 கோடியில் கட்டப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடி சிறந்த நண்பர்.. இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்