பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போராட்டம், கலவரம்..உத்தவ் கடும் தாக்கு

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி போன்ற மாநிலங்களில்தான் சிஏஏ போராட்டங்களும், கலவரங்களும் நடக்கின்றன என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 30 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த சிவசேனா, அதை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ்(என்சிபி), காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பு வகிக்கிறார்.

முதல்வரான பிறகு முதன்முறையாக உத்தவ் தாக்கரேவும், அவரது மகனும் சுற்றுலா துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் கடந்த 2 நாள் முன்பாக டெல்லிக்குச் சென்றனர். அவர்கள் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு, மகாராஷ்டிர திட்டங்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

இந்நிலையில், மும்பை திரும்பிய உத்தவ் தாக்கரே நேற்று(பிப்.23) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகத் தொடர் போராட்டங்கள் எங்கே நடக்கிறது? மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் ஷாகீன்பாக் போராட்டம் கடந்த 60 நாட்களாக நடக்கிறது. அதே போல், உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில்தான் சிஏஏ போராட்டங்கள் நடக்கின்றன. அதிலும் உ.பி.யில் போராட்டங்களில் கலவரங்களும் நடந்தன.
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய காட்சிகளை நாம் பார்த்தோம். ஆனால், இது வரை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தியையும் நான் பார்க்கவில்லை.

மகாராஷ்டிராவில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு(என்பிஆர்) நடத்துவது குறித்து கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம். அதே சமயம், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதை மறந்து விடக் கூடாது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

You'r reading பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போராட்டம், கலவரம்..உத்தவ் கடும் தாக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை.. மு.க.ஸ்டாலின் பேச்சு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்