சோனியா, பிரியங்கா மீது எப் ஐ ஆர் போட கோரி வழக்கு.. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..

சோனியாகாந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது எப்ஐஆர் போட உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் பிப்.23ம் தேதியன்று பாஜக பிரமுகர் கபில்மிஸ்ரா தலைமையில் சிஏஏ ஆதரவு போராட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் வெடித்தது. கடந்த வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த வன்முறை தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. அந்த விசாரணையின் போது, கபில் மிஸ்ரா உள்பட பாஜக பிரமுகர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோவை நீதிபதிகள் பார்வையிட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது எப்ஐஆர் ஏன் போடவில்லை என்று காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இதன்தொடர்ச்சியாக, பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் சிலர், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா, ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. அமானுல்லா கான், ஏஐஎம்ஐஎம் கட்சி எம்பி அக்பரூதீன், வாரிஸ் பதான் ஆகியோர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குறிப்பிட்டு, அவர்கள் மீது எப்ஐஆர் போட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், டெல்லி மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

You'r reading சோனியா, பிரியங்கா மீது எப் ஐ ஆர் போட கோரி வழக்கு.. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி, நயன்தாரா சம்பளம் குறைப்பு.. அண்ணாத்த படத்தில் அதிரடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்