டெல்லி கலவரம் குறித்து ஈரான் அமைச்சர் ட்விட்.. தூதரை அழைத்து கண்டனம்..

டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட் போட்டதற்காக, அந்நாட்டுத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்துப் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு வந்திருந்த போது, டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமானது. வன்முறைச் சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஜரீப் நேற்றிரவு(மார்ச்2) ஒரு ட்விட் போட்டிருக்கிறார்.

அதில் அவர், டெல்லியில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு ஈரான் கண்டனம் தெரிவிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவுடன் ஈரான் நட்பு கொண்டிருக்கிறது. எனவே, வன்முறைகள் நிகழாமல் தடுத்து, அனைத்து இந்திய மக்களின் நலனையும் உறுதி செய்யுமாறு இந்திய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம். அமைதி பேச்சுவார்த்தை மற்றும் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஈரான் நாட்டின் தூதர் அலி செஜேனியை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அழைத்து அவரிடம் இந்தியாவின் கண்டனம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு மோதல்கள் குறித்து ஈரான் கருத்து தெரிவிப்பது நல்லதல்ல. இது நமது நட்புறவைக் கெடுக்கும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

You'r reading டெல்லி கலவரம் குறித்து ஈரான் அமைச்சர் ட்விட்.. தூதரை அழைத்து கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாட்டு நலனுக்காக உழைத்து வருகிறோம்.. பிரதமர் மோடி பேச்சு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்