கேரளாவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பினராயி விஜயன் தகவல்..

கேரளாவில் இது வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இந்நோயால் அந்நாட்டில் 3500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது மேலும் 6 பேருக்கு இந்த நோய்த் தொற்று உள்ளது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று உள்ளதாக மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்புடன் இருப்பதற்காக 7ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. 8ம் வகுப்பு முதல் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வுகள் நடத்தப்படும். அங்கன்வாடிகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You'r reading கேரளாவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பினராயி விஜயன் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ம.பி. காங்கிரசில் இருந்து 19 எம்.எல்.ஏ.க்கள் விலகல்.. கமல் ஆட்சி கவிழ்ந்தது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்