நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 5 பேர் தப்பியோட்டம்..

நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் நோய் இன்று உலகம் முழுவதும் 124 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். 80,815 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது வரை 84 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டு, தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளையும் தனி வார்டுகளில் வைத்து, பரிசோதனை செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மாயோ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் பரிசோதனையில் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த 5 பேரும் நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது பற்றி அறிந்ததும் அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து, சப்-இன்ஸ்பெக்டர் சூரியவன்ஷி கூறுகையில், இது மிகவும் சிக்கலான விஷயம். நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று கண்காணித்து வந்தோம் திடீரென அவர்களைக் காணவில்லை. அவர்கள் உணவு வாங்கச் சென்றுள்ளதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களைத் தேடிப் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ப்போம் என்றார்.
இதே போல், கேரளாவின் ஆழப்புழாவில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்கத் தம்பதி தப்பியோடி விட்டனர். அவர்களைக் கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்து, மீண்டும் மருத்துவமனையில் தனி வார்டில் அடைத்தனர்.

You'r reading நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 5 பேர் தப்பியோட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திண்டுக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்