கவர்னருடன் கமல்நாத் சந்திப்பு.. வாக்கெடுப்பு நடத்த உத்தரவு..

பாஜகவினர் கடத்திச் சென்ற காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று கவர்னரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். பாஜக ஆளும் மாநிலமான கர்நாடாகாவில் பெங்களூரு ரிசார்ட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் ராஜினாமா கடிதங்களைப் பெற்று வந்த பாஜக தலைவர்கள் அவற்றைச் சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர். இதைச் சபாநாயகர் ஏற்றால், கமல்நாத் அரசு மெஜாரிட்டி இழந்து விடும். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமாவை மட்டும் ஏற்றார் சபாநாயகர் பிரஜாபதி.

இந்த குழப்பமான சூழலில், இன்று(மார்ச்16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கமல்நாத் அரசுக்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதியோ, இன்று சட்டசபையில் கவர்னர் லால்ஜி உரை நிகழ்த்துவார் என்று தெரிவித்து விட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடவில்லை.
இதையடுத்து, முதல்வர் கமல்நாத்தை அழைத்தார் கவர்னர் லால்ஜி டாண்டன். நேற்றிரவு ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து விட்டு வந்த கமல்நாத் கூறுகையில், பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுதலை செய்தால் நான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார் என்று கவர்னரிடம் கூறினேன். மேலும், சட்டசபையைச் சுமுகமாக நடத்த வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கவர்னர் கோரினார். இது பற்றி நான் சட்டசபை சபாநாயகரிடம் கூறுவதாகத் தெரிவித்தேன் என்றார்.

You'r reading கவர்னருடன் கமல்நாத் சந்திப்பு.. வாக்கெடுப்பு நடத்த உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ம.பி. சட்டசபையில் இன்று கவர்னர் உரை.. நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்