முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை ஊரடங்கு நீட்டிக்கப்படும்?

corona lock down may extend beyond may 3.

கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி முடியும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப்.27) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் தற்போது 26 ஆயிரம் பேருக்குப் பரவியிருக்கிறது. இதில் 824 பேர் உயிரிழந்து விட்டனர்.


கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக, பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு நிலை, பொருளாதார நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை(ஏப்.27) ஆலோசனை நடத்தவுள்ளார். வீடியோ கான்பரன்சில் நடக்கும் இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் கருத்துக் கேட்கவுள்ளார். தற்போது மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், ஊரடங்கை மே 3ம் தேதிக்கு பிறகும் 2 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என்று பரிந்துரைக்கலாம் எனச் செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் சிவப்பு மண்டலம் என்று சொல்லப்படும் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசு விரும்புவதாகக் கூறப்படுகிறது.

எனவே, பிரதமர் நாளை நடத்தும் ஆலோசனையில் மே3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். குறிப்பாக, அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. மற்ற மாவட்டங்களில் சில தொழில்களுக்கு மட்டுமாவது தளர்வுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை ஊரடங்கு நீட்டிக்கப்படும்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பலி 824 ஆக அதிகரிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்