மோடி 2வது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாள்.. மக்களுக்கு வாழ்த்து கடிதம்..

Modi writes to citizens on first anniversary of NDA 2.0 govt.

பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2வது ஆட்சி கடந்த ஆண்டு மே 30ம் தேதி பதவியேற்றது. இன்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, அவர் நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டு நான் பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதியாகும். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுமையான ஆட்சிக்கு மக்கள் மீண்டும் முழுமையான வெற்றியைத் தந்து பதவியேற்ற நாள். இந்த நாளில் 130 கோடி மக்களையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் வணங்குகிறேன். எனது ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கச் செய்வதற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத இந்தியாவை உருவாக்கியுள்ளோம். கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கு காஸ் இணைப்பு, மின்சார வசதி செய்து கொடுத்து வருகிறோம்.

தவறான நிர்வாகம், ஊழல்களிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக நாடு விடுபட்டுள்ளது. ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. முஸ்லிம் பெண்களை வதைக்கும் காட்டு மிராண்டித்தனமான முத்தலாக் முறைக் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த ராமர் கோயில் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் சுமுகமான தீர்வை கொடுத்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, நாட்டின் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் உறுதி செய்யப்பட்டது. இது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகளை எமது அரசு நிறைவேற்றியுள்ளது. அத்தனையும் சொல்வதற்கு நேரம் போதாது. ஓராண்டுக் காலத்தில் ஒவ்வொரு நாளும் எனது அரசு 24 மணி நேரமும் முழு வேகத்துடன் உழைத்து, இந்த முடிவுகளை அமல்படுத்தியுள்ளது.

கொரோனா பரவிய நேரத்தில் விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் மற்றும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களைக் கவுரவிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நிகழ்ச்சிகள், மக்கள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை மக்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பது போன்றவை நாட்டின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.இந்த தருணத்தில் மக்களின் ஏகோபித்த அன்பு, நல்வாழ்த்து, சிறப்பான ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதற்காக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

You'r reading மோடி 2வது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாள்.. மக்களுக்கு வாழ்த்து கடிதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் தாண்டியது.. சென்னையில் 13,362 பேர் பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்