எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு..

Crucial India-China military meet over Ladakh standoff today.

இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன. கடந்த சில நாட்களாக இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர். இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.


ஏற்கனவே அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளை உரிமை கொண்டாடி பிரச்சனையை ஏற்படுத்தி வரும் சீனா, தற்போது எல்லையில் கிழக்கு லடாக் உள்பட 4 இடங்களில் அத்துமீறி வருகிறது. மேலும், பங்காங் ஏரியில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் சீனா எல்லையில் உள்ள அந்நாட்டின் விமான தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இது தொடர்பான சேட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த பிரச்சனை குறித்து உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசித்தார். எந்த விதத்திலும் இந்தியாவின் பணிகளை நிறுத்தக் கூடாது என்றும் சீனாவிற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா-சீனா மோதலை தீர்க்க தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதை இருநாடுகளுமே ஏற்க மறுத்து விட்டன. மேலும், இந்தப் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இருநாடுகளின் ராணுவத் தளபதிகள் மட்டத்தில் இன்று(ஜூன்6) பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சீனாவின் சூசுல்-மோல்டா எல்லையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர்சிங் தலைமையில் 10 ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சீனாவின் தரப்பில் மேஜர் ஜெனரல் லின் லியூ தலைமையில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் எல்லையில் படைக்குறைப்பு செய்வது, மோதல்களைத் தவிர்ப்பது குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விமான அதிபராக நடிக்கும் சூர்யாவுக்கு சென்சார் சர்ட்டிபிகேட் .. என்ன சான்று தெரியுமா?..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்