கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் ஜெ.அன்பழகனை சந்தித்த ஸ்டாலின்..

M.K.Stalin visit DMK MLA J.Anbhazagan in Rela Hospital.

கொரோனா தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த 4 நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கொரோனா பரவிய காலத்தில் 62 வயதான இவருக்கு உடல்நலம் குறைந்ததால், கடந்த 2ம் தேதியன்று குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.


இதனால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், ஆக்சிஜன் தெரபி அளிக்கப்பட்டது. நேற்று(ஜூன்4) அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. முதல் நாளில் 80 சதவீதம் வென்டிலேட்டர் உதவியில் சுவாசித்த ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 45 சதவீத வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் இன்று ரேலா மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு ஜெ.அன்பழகனைப் பார்த்து விட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் ஸ்டாலின் விசாரித்தார். மருத்துவமனை நிர்வாகி முகமது ரேலா, டாக்டர் இளங்குமரன் ஆகியோர், ஜெ.அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலினிடம் விவரித்தனர். இதன்பின், அன்பழகனை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு டாக்டர்களிடம் கூறி விட்டு, ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

You'r reading கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் ஜெ.அன்பழகனை சந்தித்த ஸ்டாலின்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குஜராத் ஊரடங்கு தளர்வு.. சூரத் ஜவுளி சந்தை திறப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்