கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலை உயர்வு ஏன்? மோடிக்கு சோனியா கேள்வி..

Sonia Gandhi Letter To PM On Fuel Prices.

கொரோனா காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருப்பது ஏன்? என்று கேட்டு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டில் முதன்முதலாகப் பொறுப்பேற்ற போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.71 ஆக இருந்தது. இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 38 டாலராகச் சரிந்து விட்டது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.80 ஆக உயர்ந்திருக்கிறது. காரணம், விலைக் குறைவை விடச் சுங்க வரியை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கிறது.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரிகளை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்வதால், கடந்த சில நாட்களாக அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம், 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருவாயை ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், கொரோனா காலத்தில் ஏழை நடுத்தர வர்க்க மக்கள் வேலை இழந்து, வருவாய் இழந்து தவித்து வரும் நிலையிலும் இப்படி அரசு செய்வது சரியான அணுகுமுறையே அல்ல.

கடந்த 6 ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது 12 முறை சுங்க வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பெட்ரோல் மீது 258 சதவீதமும், டீசல் மீது 828 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மத்திய அரசு இந்த 6 ஆண்டுகளில் 18 லட்சம் கோடியை ஈட்டியிருக்கிறது. இந்த சூழலில், மக்களுக்கு இந்த வருவாயில் இருந்து ஏதாவது உதவி செய்ய வேண்டுமெனில், பெட்ரோல், டீசல் வரிகளை அரசு குறைக்க வேண்டும்.இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

You'r reading கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலை உயர்வு ஏன்? மோடிக்கு சோனியா கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்