சீனா தாக்குதல் பிரச்சனை.. அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா, ஸ்டாலின் பங்கேற்பு..

PM Modi to hold all-party meeting on Ladakh face-off today

லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதல் தொடர்பாக விவாதிக்கப் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது.

ஆனால், அது உறுதி செய்யப்படவே இல்லை. சீனப் படைகள் தொடர்ந்து இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படுகிறது.லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது பற்றி விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த ஆலோசனைக் கூட்டம், இன்று(ஜூன்19) மாலை 5 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது.
கல்வான் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்குவார் என்றும், அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 5க்கும் அதிகமான லோக்சபா எம்.பி.க்களை கொண்டுள்ள 20 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தேஜாஷ்வி யாதவ் கூறுகையில், நாடாளுமன்றத்திற்கு எங்கள் கட்சிக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனாலும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என்ன அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றார்.ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சஞ்சய்சிங் கூறுகையில், மத்தியில் ஈகோ அதிகம் கொண்ட அரசு இருக்கிறது. தலைநகர் டெல்லியை ஆளும் கட்சியாக உள்ள ஆம்ஆத்மியை அழைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. டெல்லியில் ஆள்வதுடன் பஞ்சாப்பில் முக்கிய எதிர்க்கட்சியாகவும் இருக்கிறோம். ஆனாலும், எங்களை அழைக்கவில்லை என்றார்.

You'r reading சீனா தாக்குதல் பிரச்சனை.. அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா, ஸ்டாலின் பங்கேற்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கவுதம் மேனனுடன் இணையும் தேசிய விருது கேமராமேன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்