சீனப் பொருட்களை புறக்கணிக்க கூடாது.. ப.சிதம்பரம் பேட்டி..

India must continue in the global supply chain, not boycott Chinese goods, says P.Chidambaram.

நாட்டின் பாதுகாப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது போன்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், சீனப் படை பலி குறித்து உறுதி செய்யப்படவில்லை.


இந்நிலையில், சீனப் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும், இந்தியத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜகவினர் கொதிப்புடன் கூறி வருகிறார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதமாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: இந்தியா முடிந்த அளவுக்குச் சுயச்சார்புடன் நமது தயாரிப்புகளையே வாங்க வேண்டும். ஆனால், அதற்காகச் சர்வதேச சந்தைச் சங்கிலியிலிருந்து நாம் விலகி விட முடியாது. மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தாக வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு போன்ற மிகவும் சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது. உலகம் முழுவதும் சீனா மேற்கொள்ளும் மொத்த வர்த்தகத்தில் இந்தியா வாங்குவது என்பது சிறிய அளவாக இருக்கும். அதைப் புறக்கணிப்பதால் அந்நாட்டுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடப் போகிறது?
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

You'r reading சீனப் பொருட்களை புறக்கணிக்க கூடாது.. ப.சிதம்பரம் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இறந்த இயக்குனர் கண்டுபிடித்த பார்த்திபன் பாத்திரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்