கல்வானில் மீண்டும் சீனா ஆக்கிரமிப்பு.. புதிய படங்கள் வெளியானது..

New satellite images show Chinese structures back at Galwan clash site.

இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட லடாக்கின் கல்வான் பகுதியில், சீனா தற்காலிக கூடாரங்களை அமைத்து அதிக வாகனங்களையும் நிறுத்தியுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. இந்திய எல்லைக்குள் கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டி முடியும் தருவாயில் உள்ள இப்பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் திடீர் மோதலை ஆரம்பித்தன.

இதையடுத்து, கடந்த 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் கடந்த 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா அந்த இடத்தில் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மக்சார் டெக்னாலஜிஸ் என்ற வானியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் எடுத்த சில படங்களை வெளியிட்டிருக்கிறது.
அதில், கல்வான் பகுதியில் சீனா மீண்டும் ஆக்கிரமித்து கூடாரங்களை அமைத்திருப்பது தெரிகிறது.

மேலும், புல்டோசர்கள், ஜே.சி.பி. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்பதும் தெரியவந்துள்ளது. இருநாட்டுப் படைகளும் தற்காலிகமாக விலகிச் செல்வது என்று முடிவெடுத்த பின்பும் சீனா வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது.தற்போது பங்காங் ஏரியின் ஒரு பகுதியில் இந்தியப் படைகளும், இன்னொரு பகுதியில் சீனப் படைகளும் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே, கல்வான் பள்ளத்தாக்கை முழு உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது சீனா. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

You'r reading கல்வானில் மீண்டும் சீனா ஆக்கிரமிப்பு.. புதிய படங்கள் வெளியானது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்.. திக்விஜயசிங் மீது வழக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்