லடாக் எல்லைக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்.. ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை..

PM Modi in Ladakh accompanied by Bipin Rawat.

லடாக்கின் நிமு பகுதிக்குப் பிரதமர் மோடி இன்று அதிகாலையில் திடீர் விசிட் செய்துள்ளார். நிமு சென்று, எல்லையில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் மோடி விவாதித்தார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. இந்திய எல்லைக்குள் கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டி முடியும் தருவாயில் உள்ள இப்பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன. இதையடுத்து, கடந்த மாதம் 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா அந்த இடத்தில் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்தது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீன நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக்கில் எல்லைக்கோடு பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் கேட்டறிந்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக இருந்தது. ஆனால், திடீரென அவரது பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலையில் விமானம் மூலம் லடாக்கிற்கு சென்றார்.

லடாக்கில் சுமார் 11 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் உள்ள நிமு பகுதிக்குப் பிரதமர் மோடி சென்றார். அவருடன் முப்படைத் தளபதி பிபின்ராவத், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோரும் சென்றனர். அங்குப் பிரதமர் மோடி, ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சீனாவின் அத்துமீறல்கள் குறித்தும், ராணுவத்தினரின் பதிலடி குறித்தும் அப்போது பிரதமர் கேட்டறிந்தார்.

You'r reading லடாக் எல்லைக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்.. ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒடிடி தளத்துக்கு வரும் பிரபல நடிகர், நடிகை மகள் படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்