கல்வான் பகுதியில் பின்னோக்கி நகர்ந்த சீன படை வாகனங்கள்..

Chinese Army has moved back tents, vehicles troops by 2 km in Galwan area.

கல்வான் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்குச் சீனப் படைகள் பின்னோக்கி நகர்ந்துள்ளது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. இதையடுத்து, கடந்த ஜூன் 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.


இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா அந்த பகுதிக்குள் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்தது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீன நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் தற்போது சீனப் படைகள் பின்னோக்கிச் செல்வதாக நமது ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டு, சுமார் 1.5 முதல் 2 கி.மீ. தூரத்திற்குச் சீனப் படைகள் பின்னோக்கி நகர்ந்துள்ளதாகவும், எனினும் கல்வான் பகுதியில் ஆயுதங்களுடன் சீனப் படைகள் நீடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

You'r reading கல்வான் பகுதியில் பின்னோக்கி நகர்ந்த சீன படை வாகனங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா.. சிகிச்சையில் 8 எம்.எல்.ஏ.க்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்