உ.பி. ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதால் போலீஸ் சுட்டுக் கொலை..

KanpurEncounter case main accused Vikas Dubey shot dead in police encounter.

உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல தாதா விகாஸ் துபே நேற்று மத்தியப் பிரதேசப் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் தப்பிக்க முயன்றதால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்ட்டான்.உத்தரப்பிரதேசத்தில் பல கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய விகாஸ் துபே, அம்மாநிலத்தில் அரசியல் பின்புலத்துடன் பிரபல தாதாவாகச் சுற்றித் திரிந்தான். கடைசியாக ஒரு கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அவன் கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கிறான். கடந்த வாரத்தில் இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

ஒரு நாள் அதிகாலையில், போலீசார் பெரும்படையுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். அப்போது ரவுடி துபே மற்றும் கூட்டாளிகள் உஷாராகி, போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. தேவேந்திரகுமார் மிஸ்ரா உள்பட 8 போலீசார் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாகத் தாதா விகாஷ் துபேவின் கூட்டாளிகள் பிரபாத் மிஸ்ரா, பிரவீன் துபே உள்பட 5 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் பதுங்கியிருந்தான். அங்கு ஒரு கோயிலுக்கு சென்று வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு, பூஜை சாமான்களை ஒரு கடையில் வாங்கினான். அந்த கடைக்காரருக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ம.பி. போலீசார் அங்கு வந்து துபேவை கைது செய்தனர். அப்போது அவன், நான் யார் தெரியுமா? நான்தான் விகாஸ் துபே என்று போலீசாரை மிரட்டும் வகையில் சத்தம் போட்டுள்ளான். ஆனாலும், போலீசார் அவனை மண்டையில் தட்டி கைது செய்து அழைத்துச் சென்றனர்.விகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், ம.பி. முதல்வர் சிவராஜ்சவுகான் தெரிவித்தார். இதையடுத்து, பிரபல ரவுடி விகாஸ் துபேவை, உ.பி.க்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஐந்தாறு வாகனங்களில் போலீசார் பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றனர்.

இன்று அதிகாலையில் உ.பி. எல்லைக்குள் போலீஸ் வாகனங்கள் வந்த போது மழை கொட்டியது. அப்போது ஒரு வாகனம் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விகாஸ் துபே தப்பிக்க முயன்றான். உடனே போலீசார் அவனைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவன் இறந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading உ.பி. ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதால் போலீஸ் சுட்டுக் கொலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா நோயால் 1765 பேர் பலி.. மாவட்டங்களில் பரவுகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்