சச்சின் பைலட் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்..

Notice issued to Sachin Pilot and 18 mlas for not attending C.L.P. meetings

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சிசார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். அவர், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று சச்சின் பைலட் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. இதற்கேற்ப, பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஜோதிராதித்ய சிந்தியா எப்படிச் செயல்பட்டாரோ அதே போன்று பைலட்டும் செயல்பட்டார்.ஆனால், ம.பி.யில் சிந்தியாவுக்கு கை கொடுத்த நம்பர் கணக்கு பைலட்டுக்கு இல்லை. கடந்த 2 நாட்களாக நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் தொடர்ந்து கெலாட்டுக்கு மெஜாரிட்டி உள்ளது. இதனால், பைலட்டுடன் சென்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கினர்.

இ்ந்நிலையில், பைலட் ஆதரவாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் தரப்பில் மேலும் ஒரு கணக்குப் போட்டுள்ளனர். அதாவது, 2 முறை நடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களுக்கு வராதது ஏன்? என்று கேட்டு பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் கட்சிசார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை அந்த எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் ஒட்டினர். நோட்டீசுக்கு 2 நாளில் பதிலளிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் பதில் அளித்தாலும் அதை ஏற்காமல் சபாநாயகரிடம் புகார் அளித்து அவர்களின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

அப்படி 19 பேரையும் தகுதி நீக்கம் செய்தால், சட்டசபையின் மொத்த பலம் 181 ஆகக் குறைந்து விடும். அப்போது மெஜாரிட்டிக்கு 91 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும். எனவே, கெலாட் அரசு தப்பி விடும் என்று கணக்குப் போட்டுள்ளார்கள்.இதற்கிடையே, சச்சின் பைலட், நான் பாஜகவில் சேர மாட்டேன். நான் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று பல்டி அடித்துள்ளார்.

You'r reading சச்சின் பைலட் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜகவில் சேர மாட்டேன்.. பல்டியடித்த சச்சின் பைலட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்