ஆந்திர அரசு மீது ஜனாதிபதியிடம் தெலுங்கு தேசம் புகார்..

Telugu Desam Party team meets President Kovind at Rashtrapati Bhavan.

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் குற்றம்சாட்டி, ஜனாதிபதியிடம் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாகச் சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

ஜெகன் அரசு பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்யத் தொடங்கியது. அமராவதி திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிதாக 3 தலைநகர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. மேலும், தெலுங்கு தேச முக்கியப் பிரமுகர்கள் பலர் மீது ஊழல் மற்றும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அரசை எதிர்த்து சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தார்.இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லா தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் இன்று(ஜூலை16) காலை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து, ஜெகன் அரசு மீது பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவை அளித்தனர்.

பின்னர், ஜெயதேவ் கல்லா கூறுகையில், ஆந்திராவில் ஜெகன் அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ளது. இந்த ஓராண்டில் ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைத்து விட்டனர். தலைநகர் அமராவதி திட்டத்தை ரத்து செய்து அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கிறது. இது குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.

You'r reading ஆந்திர அரசு மீது ஜனாதிபதியிடம் தெலுங்கு தேசம் புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து சச்சின்பைலட் ஐகோர்ட்டில் மனு.. இன்று மாலை விசாரணை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்