இன்ச் நிலத்தை கூட பறிக்க முடியாது.. ராஜ்நாத்சிங் பேட்டி..

Defence Minister RajnathSingh interacts with Indian Army at Lukung, Ladakh.

இந்திய நிலப்பரப்பில் ஒரு இன்ச் பகுதியைக் கூட, உலகில் எந்த சக்தியாலும் எடுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே 2 மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. கடந்த ஜூன் 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

பின்னர், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதன் பின், ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், கடந்த 3ம் தேதியன்று லடாக்கில் எல்லைக்கோடு பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் கேட்டறிந்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக இருந்தது. ஆனால், திடீரென அவரது பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பிரதமர் மோடி அங்குச் சென்றார்.

இந்நிலையில், இன்று(ஜூலை17) காலையில் ராஜ்நாத் சிங், லடாக் எல்லைக்குச் சென்றார். லடாக்கில் லூகுங் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமிற்கு அவர் சென்றார். அவருடன் முப்படைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவனே சென்றனர். அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பின்னர், ராஜ்நாத்சிங் கூறுகையில், சீனாவுடன் எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்குத் தீர்வு ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டால் அதுவே சிறந்தது. அதே சமயம், இந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து ஒரு இன்ச் பகுதியைக் கூட உலகில் எந்த சக்தியாலும் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

You'r reading இன்ச் நிலத்தை கூட பறிக்க முடியாது.. ராஜ்நாத்சிங் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சம் தாண்டியது.. பலி 25 ஆயிரமானது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்