கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் சீனாவுடன் சேரத் தயார்.. அமெரிக்க அதிபர் பேச்சு

Trump willing to work with China on Covid-19 vaccine if it gets good results.

சீனா மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில், அந்நாட்டுடன் ஒத்துழைக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 38 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா நோயைச் சீனா திட்டமிட்டு உலகம் முழுவதும் பரப்பியிருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனமும் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைச் சீனா மறைத்ததும், அது குறித்து மற்ற நாடுகளுக்கு எச்சரிக்காமல் விட்டதும்தான் இந்நோய் உலகம் முழுவதும் பரவியதற்குக் காரணம். கொரோனா பரவலுக்குச் சீனாவே பொறுப்பு என்றும் அவர் பகிரங்கமாகக் கூறியிருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று(ஜூலை21) நிருபர்களுக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் சீனா முன்னிலையில் இருந்தால், அந்நாட்டுடன் அமெரிக்கா ஒத்துழைக்குமா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் எந்த நாட்டுடனும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம். அமெரிக்காவுக்கு நன்மை தரக் கூடிய யாரிடமும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்றார்.சீனாவின் கேன் சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தது. இதை அந்நாட்டு ராணுவப் பிரிவு பரிசோதித்துப் பார்த்ததில், முதல் கட்டமாக அது பாதுகாப்பானதாகத் தெரிய வந்துள்ளது. அதே போல், அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் ஒரு மருந்து கண்டுபிடித்துள்ளது. ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம், அமெரிக்காவின் பைஷர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு மருந்தை ஆய்வு செய்து வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நிறுவனமும் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறது.

You'r reading கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் சீனாவுடன் சேரத் தயார்.. அமெரிக்க அதிபர் பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 51 ஆயிரம் பேர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்