ரூ.4,167 கோடியில் ரூ.2,000 கோடி ஊழல்?.. இது கர்நாடகாவின் `அரசியல் ஆட்டம்

4,167 crore, 2,000 crore corruption? .. This is Karnatakas political game

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, நம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அப்போது சில உபகரணங்களை அரசுகள் விலை அதிகமாகக் கொடுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசு மீதும் அப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படப் பின்னாளில் அந்த டெண்டர் ரத்து செய்யப்படவே சர்ச்சை ஓய்ந்தது. இதற்கிடையே, இதே குற்றச்சாட்டால் கர்நாடக மாநில அரசியலில் அனல் தகித்து வருகிறது.

காங்கிரஸைக் கவிழ்த்து பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மாநில அரசியலில் அவ்வப்போது புயல் வீசுவது வாடிக்கையாகி வந்தது. இப்படியான நிலையில் `கொரோனா ஊழல்' விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கி, டெஸ்ட் கிட்கள், படுக்கைகள், பிபிஇ மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியது. இதற்கு அதிகபட்ச விலை கொடுத்து எடியூரப்பா அரசு வாங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்.

இதற்கு ஒருபடி மேலாக, ``கோவிட் -19 தொடர்பான அரசாங்கத்தின் மொத்த செலவு ரூ.4,167 கோடி எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் குறைந்தபட்சம் ரூ .2,000 கோடியாவது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அபேஸ் செய்திருப்பார்கள்" எனக் கமெண்ட் அடித்தார் முன்னாள் முதல்வர் சித்த ராமையா. அவ்வளவுதான் பிஜேபி அமைச்சர்கள் மொத்தமாகக் கொதித்தெழுந்துவிட்டார்கள். சிவகுமார் மற்றும் சித்தரா மையாவுக்கு எதிராக வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த ஊழலுக்கு மறுப்பு தெரிவித்துப் பேசிய பிஜேபி பொதுச்செயலாளர் ரவிக்குமார், ``ரூ.4,167 கோடி செலவிடப்பட்டதாக அவர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? முதலமைச்சரும், அமைச்சர்களும் அதிக தொகை ஒதுக்கவே இல்லை என்று கூறியுள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்கு அரசாங்கம் ஒதுக்கியதே ரூ.2,118 கோடிதான். கோவிட் -19 நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ.1,611 கோடியும், மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.506 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சிவகுமாரும் சித்தரா மையாவும் இருபது கடிதங்களை எழுதியிருக்கிறோம், ஆனால் அரசாங்கம் தங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். அரசாங்கம் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளாத போது, ​​இந்த எண்ணிக்கை எங்கிருந்து கிடைத்தது, எப்படி இதைக் கூறுகிறீர்கள். காங்கிரஸின் இந்த செயல் மக்களைத் தவறாக வழி நடத்தும். இவர்களின் பொய்க் குற்றச்சாட்டு முதலமைச்சரின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது. நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். உடனே அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சித்த ராமையா எடியூரப்பாவைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிறைக்குச் சென்றதாகக் கூறி குறி வைக்கிறார். அப்படியென்றால் சிவகுமார் டெல்லி திகார் சிறைக்கு பிக்னிக் சென்றாரா?. சிவகுமாரின் சொத்துக்கள் 2013ல் ரூ.251 கோடியாக இருந்தன. 2018ல் இது 200% ஆக அதிகரித்து ரூ.840 கோடியாக உயர்ந்தது. நீங்கள் என்ன வியாபாரம் செய்கிறீர்கள், தயவுசெய்து அதை மாநில மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் எங்களைக் குறை சொல்லுங்கள்" என்றார்.

You'r reading ரூ.4,167 கோடியில் ரூ.2,000 கோடி ஊழல்?.. இது கர்நாடகாவின் `அரசியல் ஆட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லட்சுமி ராமகிருஷ்ணனை மீண்டும் வம்பிழுக்கும் வனிதா.. மீண்டும் பஞ்சாயத்து பண்ண விடமாட்டேன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்