கேரளாவில் 6 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

Temples openned in Kerala with corona protocol

கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கேரளாவில் மார்ச் 3வது வாரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் கோவில்கள், சர்ச்சுகள் மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் மனதளவில் கடும் வேதனை அடைந்தனர். ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து அவரவர் தங்களது வீடுகளிலேயே பிரார்த்தனை நடத்தி வந்தனர். இந்த கொரோனா காலத்தில் தான் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரும், முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளான ரம்ஜானும், பக்ரீத்தும் வந்தன. இதேபோல இந்துக்களின் புனித மாதமான ஆடி மாதமும் கடந்து போனது. இவற்றையெல்லாம் கொண்டாட முடியாமல் பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்கள் தேவசம் போர்டின் (தமிழ்நாட்டில் அறநிலையத் துறை) கட்டுப்பாட்டில் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சபரிமலை கோவில் தவிர திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களும் இன்று முதல் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. மலையாள புது வருடப் பிறப்பான இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

ஆனால் முன்பை போலப் பக்தர்களால் அவ்வளவு எளிதில் தரிசனத்திற்குச் செல்லமுடியவில்லை. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றியே பக்தர்கள் இன்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கோவிலுக்குள் செல்ல முடியாது. முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கோவிலுக்கு வரும் அனைவரது பெயர், விபரங்கள் எழுதி வைக்கப்படுகின்றன. இதற்காக ஒரு கோவில் ஊழியர் வாசல் முன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நெருக்கமாக நிற்க அனுமதி இல்லை. இப்படிப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி இன்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்னும் ஒரு சில மாதங்களுக்கு இந்த நிலைதான் தொடரும் என்று தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சபரிமலையில் இம்மாதமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மண்டலக் காலம் முதல் பக்தர்களைச் சபரிமலைக்கு அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

You'r reading கேரளாவில் 6 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுதந்திர தினத்தன்று ஓய்வு முடிவு ஏன்?! - ரெய்னா வெளிக்கொணர்ந்த உண்மை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்