கோழிக்கோடு விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட 13 பேருக்கு கொரோனா

Kozhikode plane crash: 13 volunteers tests covid positive

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு 7.41 மணியளவில் துபாயில் இருந்து இங்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து அறிந்த ஒரு சில நிமிடங்களிலேயே அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் விமான நிலையத்தில் குவிந்தனர். யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் அவர்கள் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர்.

காயமடைந்தவர்களை உடனுக்குடன் ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். கொரோனா காலமாக இருந்த போதிலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்கள் மிகத் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் தான் சில உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன என்றும், பலருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடிந்தது என்றும் டாக்டர்கள் கூறினர்.

உள்ளூர் மக்களின் இந்த நற்செயலை சிவில் மற்றும் விமான போக்குவரத்துத் துறை பாராட்டியது. தங்களது டிவிட்டர் பக்கத்தில் மலப்புரம் மக்களின் உடனடி மீட்புப் பணியை வெகுவாக பாராட்டியது இதுதவிர மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் பாராட்டியுள்ளார். இந்நிலையில் இந்த விமான விபத்தில் சிக்கி பலியான ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் தனிமையில் செல்ல வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் தனிமையில் சென்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற மலப்புரம் கலெக்டர் கோபாலகிருஷணன், உதவி கலெக்டர், சப் கலெக்டர், எஸ்பி உள்பட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கும் கொரோனா பரவியது கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான விபத்து நடந்த மறுநாள் அங்குச் சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 7 அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரும் சுய தனிமைக்குச் சென்றனர். இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading கோழிக்கோடு விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட 13 பேருக்கு கொரோனா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளி ஆசிரியரான நடிகர் மோகன்லால்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்