மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க ரேடார் கருவி

Using radar in munnar to find bodies

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களைத் தேடும் பணி இன்று 13வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 6 வயது சிறுவன் மற்றும் இந்த சிறுவனின் தாத்தா உள்பட 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் கணக்கின்படி இன்னும் 9 உடல்களை மீட்க வேண்டி உள்ளது. இவர்களைத் தேடும் பணி இன்று காலை வழக்கம் போலத் தொடங்கியது.

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாய்களின் உதவியுடன் உடல்களைத் தேடும் பணி சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டதால் முழுமையான அளவில் உடல்களை மீட்க முடியுமா என்பது சந்தேகமே. பெரும்பாலும் உடல்கள் அழுகி இருக்கவே வாய்ப்பு அதிகமாகும். சகதிக்கு அடியில் சிக்கிய உடல்களை மீட்பது பெரும் சிரமமாக இருப்பதால் உடல்களைக் கண்டுபிடிக்க ரேடார் கருவியைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை முதல் மீட்புப் படையினர் ரேடார் கருவியைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கருவி மூலம் 6 மீட்டர் ஆழத்தில் வரை உடல்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். இதனால் உடல்களை மிக எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று மீட்புப் படையினர் கருதுகின்றனர். இன்று காலை முதலே தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார், தீயணைப்பு படையினர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூர் பொதுமக்களும் உதவி செய்து வருகின்றனர்.

You'r reading மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க ரேடார் கருவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டிலிருந்து பணி (WFH): உடல் நலத்தை காப்பது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்