பிரசாந்த்பூஷன் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.. தண்டனை அளிக்க முடிவு..

Supreme Court refuses Prashant Bhushan plea to defer hearing on his sentence in contempt case.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைக்கான வாதங்களை நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது.
டெல்லியில் சமூக ஆர்வலராகவும், பிரபல வழக்கறிஞராகவும் திகழ்பவர் பிரசாந்த் பூஷன். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷனின் மகனான இவர் பல்வேறு பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளின் ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூன் 27ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தாத நிலையிலும் ஜனநாயகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதையும், அதில் நீதிமன்றங்களும் எப்படி பங்கு பெற்றன என்பதையும், குறிப்பாகக் கடைசியாகப் பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.

அதே போல், ஜூலை 29ம் தேதி போட்ட ட்விட்டில், ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு மக்கள் நீதி பெற முடியாமல் தவிக்கும் நேரத்தில், பாஜக பிரமுகர் ஒருவரின் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக்கில் தலைமை நீதிபதி பாப்டே, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.இந்த 2 பதிவுகளுக்காக பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து அவருக்குக் கடந்த ஜூலை 22ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவமதிப்பு வழக்கில் பூஷனுக்காக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த 14ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. அவருக்கான தண்டனை குறித்து முடிவெடுக்க வரும் 20ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.இதன்படி, தண்டனைக்கான விசாரணை இன்று(ஆக.20) அதே நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பிரசாந்த் பூஷன் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை விசாரித்து முடிவு வரும் வரை, தண்டனைக்கான வாதங்களைத் தள்ளி வைக்குமாறு, அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். ஆனால், நீதிபதி அருண் மிஸ்ரா இதை ஏற்க மறுத்தார். அவர் கூறுகையில், இந்த அமர்வு விசாரணையை நீங்கள் தவிர்க்க விரும்புவதாகத் தெரிகிறது. நாங்கள் நேர்மையாகவே விசாரிக்கிறோம். தண்டனை குறித்து அறிவித்த பின்புதான், தீர்ப்பு முழுமை அடையும். எனவே, உங்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டாலும், அதை உடனடியாக செயல்படுத்த மாட்டோம். சீராய்வு மனு முடிவுக்குப் பின்பே அது அமல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

You'r reading பிரசாந்த்பூஷன் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.. தண்டனை அளிக்க முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரகுமான்கான் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்.. திமுக 3 நாள் துக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்