கேரளாவில் 65 வயதான கைதிகளுக்கு 2 மாதம் கட்டாய விடுமுறை

2 months compulsory holiday for prisoners in kerala

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதன்முதலாகக் கேரளாவில் ஒரே நாளில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. மரண எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் இந்நோய் வேகமாகப் பரவி வருகிறது.

திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் மொத்தமுள்ள 970 கைதிகளில் 500க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நோய் பரவியுள்ளது. எர்ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர் உட்பட பெரும்பாலான சிறைகளிலும் கைதிகளுக்கு கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து சிறைகளில் 65 வயதுக்கு மேலான கைதிகளைச் சிறிது காலம் வெளியே அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை கேரள அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங்குக்கு கேரள அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கேரள சிறைகளில் உள்ள 65 வயதுக்கு மேல் உள்ள கைதிகளுக்கு 2 மாதம் கட்டாய விடுமுறை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 மாதங்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முதல் கேரள சிறைகளில் இருந்து 65 வயதிற்கு மேலான கைதிகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 2 மாதம் முடிந்த பின்னர் அந்தந்த சிறைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உ பா சட்டம், போக்சோ வழக்கு, தடா மற்றும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.

You'r reading கேரளாவில் 65 வயதான கைதிகளுக்கு 2 மாதம் கட்டாய விடுமுறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செப்.11ல் உ.பி. ராஜ்யசபா இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்