கைலாசா டாலரரை வெளியிட்ட நித்யானந்தா.. ஒரு டாலர் 11 கிராம் தங்கம்..

Nithyananda launches Kailasa currency and Kailasa Reserve Bank.

கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிட்டு, கைலாசா ரிசர்வ் வங்கியை தொடங்கி வைத்துள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பலாத்காரம் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளில் சிக்கியவர் நித்யானந்தா சாமியார். நடிகை ரஞ்சிதாவுடன் ஆட்டம், மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைந்த விவகாரம், பெண்களை மயக்கி ஆசிரமத்தில் அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்.

இப்படி நிறைய பிரச்னைகளில் சிக்கினாலும் நித்யானந்தாவுக்கு பல நாடுகளில் பக்தர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான சொத்துக்களையும் குவித்து வைத்திருக்கிறார். கர்நாடகாவில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை போலீசார் தேடி வந்தனர்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திடீரென சமூக ஊடகங்களில் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியானது. அதில் தான் தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும், அங்குதான் குடியிருப்பதாகவும் அதில் அறிவித்திருந்தார். மேலும், கைலாசா அரசுக்காக ஒரு தனி இணையதளத்தையும் (www.kailaasa.org) அவர் ஏற்படுத்தினார்.

இதற்கு பின் அவரைப் பற்றி தமிழகத்தில் இருந்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுவதும், அதற்கு அவர் கடுமையாக திட்டி வீடியோ வெளியிடுவதும் தொடர்கிறது. எனினும், நித்யானந்தா இருக்கும் இடத்தை அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனால், அந்த இடம் ஈக்வடாரில் உள்ள ஒரு குட்டித் தீவு என்று போலீசார் கூறினர்.

இந்நிலையில், கடந்த வாரம் நித்யானந்தா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் விநாயகர் சதூர்த்தியன்று(ஆக.22) கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிடப் போவதாகவும், ரிசர்வ் வங்கியை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி, இன்று கைலாசா டாலரை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில், கைலாசா நாட்டின் ஒரு டாலர் என்பது 11.66 கிராம் தங்கக் காசு. தமிழர்களின் வரலாற்றில் நாணயம் தங்கமாகவே இருக்கும். பொற்காசு என்பது தான் தமிழர்களின் நாணயம். அதே போல், ஒரு டாலர் என்பது 25 விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு டாலர் என்பது ஒரு தோலாவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பேச்சில் தனம் என்பதற்கான பிற பெயர்களையும் அடுக்கியுள்ளார். வழக்கம் போல் வேதங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். கைலாசாவின் ரிசர்வ் வங்கி கொள்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

You'r reading கைலாசா டாலரரை வெளியிட்ட நித்யானந்தா.. ஒரு டாலர் 11 கிராம் தங்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பல குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவிய நாய் போலீசில் சேர்ப்பு... ஊர்மக்கள் ஆனந்த கண்ணீர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்