கொடேச்சா.. தோத்தா கோபி இந்தி சீக்னே சாஹியே கியா? -ஆனாலும் இவ்வளவு கிண்டல் கூடாது ராமதாஸ்!

Kodecha .. Dota Kopi Hindi Seekne Sahiye Kia?

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா, `இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று கூறி அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், கொடேச்சாவை விமர்சிக்கும் விதமாக, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கலாய் பதிவை இட்டுள்ளார். அதில், `` எனது பேரப்பிள்ளைகள் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படித்த போது அவர்களுக்குக் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களுக்கு அந்த பாடங்களில் வல்லமை பெற்ற ஆசிரியர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து தனிப்பயிற்சி வகுப்பு நடத்துவது வழக்கம். இவை நடந்து நீண்ட நாட்களாகி விட்டன.நேற்று மாலை அவர்களின் தொலைப்பேசி எண்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். இந்தி கற்றுத் தருவதற்காக நல்ல இந்தி பண்டிட் எவரேனும் இருக்கிறார்களா? என்று கேட்டேன்.அதைக் கேட்டதும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. அய்யா... என்ன இது... உங்கள் குடும்பத்தில் தான் எவரும் இந்தி படிக்க மாட்டார்களே. பிறகு எதற்கு இந்தி பண்டிட்டை தேடுகிறீர்கள்?” என்று கேட்டனர்.அவர்களை அதிர்ச்சியடைய வேண்டாம் என்று கூறி விட்டு, காரணத்தை விளக்கினேன்.

அது ஒன்றுமில்லை. எங்கள் தோட்டத்திற்கு ஏராளமான கிளிகள் வந்திருக்கின்றன. அவை அழகாகத் தமிழ் பேசுகின்றன. அதிகாலை 4.00 மணிக்கே இசைக் கச்சேரியைத் தொடங்கிவிடும் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் காலை 7.00 மணி வரை தொடருகின்றன. முன்பெல்லாம் பறவைகளின் கச்சேரியைக் கேட்டு விழித்தெழுந்து பணிக்குச் செல்வது மக்களின் வழக்கமாக இருந்தது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்குச் சூரியன் உதிப்பதும் தெரிவதில்லை. மறைவதும் தெரிவதில்லை.அவை ஒரு பக்கம் கிடக்கட்டும்.... கிளிகள் பேசும் தமிழ் இனிமையாக இருக்கிறது. கொடேச்சா போன்ற கோமாளிகள் எவரேனும் வந்து இந்தி தெரியாமல் தமிழ் பேசும் கிளிகள் எல்லாம் வெளியேறுங்கள் என்று கூறி விட்டால் என்ன செய்வது? என்ற கவலையில் தான் அவற்றுக்கு இந்தி கற்றுத் தருவதற்காக பண்டிட்களை தேடுகிறேன்” என்று கூறினேன்.

அதைக் கேட்ட ஆசிரியர்கள், ஆனாலும் இவ்வளவு கிண்டல் கூடாதுங்க அய்யா” என்று கூறி தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்து விட்டனர்.தலைப்பு விளக்கம்: கொடேச்சா.... தோத்தா கோ பி இந்தி சீக்னே சாஹியே கியா?” என்றால் கொடேச்சா.... கிளிகளுக்கும் இந்தி கற்றுத் தர வேண்டுமா?” என்று பொருள்). கொடேச்சா கோமாளிகளுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை சுமாராக இந்தி பேசத் தெரிந்த நண்பர் ஒருவர் தான் மொழிபெயர்த்துக் கொடுத்தார்!" என்று பதிவிட்டுள்ளார். ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கிண்டல் கூடாது ராமதாஸ்!.

You'r reading கொடேச்சா.. தோத்தா கோபி இந்தி சீக்னே சாஹியே கியா? -ஆனாலும் இவ்வளவு கிண்டல் கூடாது ராமதாஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வில்லன் நடிகருக்கு மேக்கப் போட்ட மோகன்லால்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்