சவுதியில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு செக்

Saudization in private sector

சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை மேலும் கடுமையாக்கச் சவுதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அகமது பின் சுலைமான் அல் ராஜிஹி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தனியார் நிறுவனங்களில் பொறியியல் பணிகளில் 20% உள்ளூர் வாசிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வரும் 26ம் தேதி முதல் 9 துறைகளில் 70 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் வாசிகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்த உத்தரவால் இந்த துறைகளில் பணிபுரியும் 50% வெளிநாட்டினருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேயிலை, காப்பி, சர்க்கரை, மசாலா, மினரல் வாட்டர், குளிர்பானங்கள், பழம், காய்கறி, தானியங்கள், விதைகள், பூக்கள், செடிகள், விவசாயப் பொருட்கள், புத்தகங்கள், ஸ்டேஷனரி, கைவினை பொருட்கள், புராதன பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை, பால் உற்பத்தி பொருட்கள், சமையல் எண்ணை, துப்புரவு பொருட்கள், பிளாஸ்டிக், சோப் ஆகிய பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளில் 70% உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்கள் தொடர்பு மேலாளர், காசாளர், விற்பனை மேலாளர், வணிக மேலாளர், கண்காணிப்பாளர், நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகிக்கும் தலைவர், காபி மேக்கர், விற்பனையாளர், வணிக நிபுணர் ஆகிய பதவிகளிலும் உள்ளூர் வாசிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசின் இந்த உத்தரவு இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சவுதியில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு செக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விவசாயிகளின் இழப்பீடுக்காக அரசு தரும் மானியம்...எப்படி விண்ணப்பிப்பது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்