கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவனம் ₹ 2,000 கோடி மோசடி தமிழ்நாட்டிலும் கிளைகள் உள்ளன

Popular finance, managing director thomas daniels daughters arrested at delhi airport

கேரள மாநிலம் பத்தனம் திட்டா வில் கடந்த 1965ம் ஆண்டு பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் என்பவர்தான் இந்த நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்தது. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்குக் கிளைகள் உள்ளன.

இதன்பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் கிளைகள் பரவத் தொடங்கின. தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 18 கிளைகள் உள்ளன. 5 மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனம் நகைக்கடன், பணப் பரிமாற்றம், இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. கவர்ச்சிகரமான வட்டியைத் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து நிதி முதலீட்டையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறக்கோரி இந்த நிறுவனத்திற்குச் சென்றனர். ஒரு வாரம் கழித்து வந்தால் பணத்தைத் தந்துவிடுவதாகக் கிளை மேலாளர் கூறியுள்ளார். ஆனால் மறுவாரம் சென்று பார்த்தபோது அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் அது குறித்து பத்தனம் திட்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தபோது கேரளாவில் பல கடைகள் மூடப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான தாமஸ் டேனியல், இவரது மனைவி பிரபா டேனியல் மற்றும் இவர்களது மகள்களான ரினு மரியம் தாமஸ், ரியா ஆன் தாமஸ் ஆகியோர் திடீரென மாயமானார்கள்.

இதையடுத்து இவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அனைத்து முக்கிய விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தாமஸ் டேனியலின் மகள்களான ரினு மரியம் தாமஸ் மற்றும் ரியா ஆன் தாமஸ் ஆகிய இருவரும் டெல்லி விமானத்தில் வைத்துப் பிடிபட்டனர். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இது குறித்து டெல்லி போலீசார் கேரள போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்யக் கேரள போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். இந்த நிறுவனம் ₹2,000 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் கூறினர். கேரளா முழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் முன் வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

You'r reading கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவனம் ₹ 2,000 கோடி மோசடி தமிழ்நாட்டிலும் கிளைகள் உள்ளன Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரதிராஜா சங்கத்தில் 100 தயாரிப்பாளர்கள் இணைந்தனர்.. புதிய அறிவிப்புகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்