நாடாளுமன்றத்தின் மழைக்கால தொடர் செப்.14ல் தொடக்கம்.. சனி, ஞாயிறு செயல்படும்..

The Fourth Session of Seventeenth Lok Sabha will commence on 14th September 2020

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் இரு அவைகளும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக, கடந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் அவசரமாக முடிக்கப்பட்டது. தற்போது மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் பரவல் இன்னும் கட்டுப்படாததால், பல கட்டுப்பாடுகளுடன் இந்த தொடரை நடத்துவதற்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கய்யநாயுடுவும் ஆலோசித்து வந்தனர்.

இதையடுத்து, மக்களவை அரங்குடன் மாநிலங்களவை அரங்கையும் சேர்த்து சமூக இடைவெளி விட்டு உறுப்பினர்களை அமர வைப்பதற்கும், பெரிய திரைகள் அமைத்து உறுப்பினர்கள் பேசுவதை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 14ம் தேதி மழைக்கால கூட்டத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் செப்.14ம் தேதியன்று மக்களவை காலை 9 மணிக்குக் கூடும். மதியம் ஒரு மணி வரை அவை செயல்படும். மறுநாள் 15ம் தேதி முதல் மதியம் 3 மணிக்கு அவை கூடி, இரவு 7 மணி வரை செயல்படும்.

அதே போல், மாநிலங்களவை கூட்டம் முதல் நாளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவைகள் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேள்வி நேரம், தனி நபர் மசோதா கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரம் கிடையாது என்ற அறிவிப்புக்கு திரிணாமுல் உள்பட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

You'r reading நாடாளுமன்றத்தின் மழைக்கால தொடர் செப்.14ல் தொடக்கம்.. சனி, ஞாயிறு செயல்படும்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - DYFI தொண்டர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை...கேரளாவில் பெரும் பரபரப்பு...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்