மூணாறில் குறிஞ்சி பூத்தது ரசிக்கத்தான் யாரும் இல்லை

kurinji blooming in munnar

குறிஞ்சி பூ குறித்துத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதன் அழகை ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இடுக்கி மாவட்ட மலைப்பகுதிகளில் ஏராளமாகக் குறிஞ்சி பூக்கும். இங்குள்ள ராஜமலை, கொளுக்குமலை, மறையூர், டாப் ஸ்டேஷன், தோண்டி மலை மற்றும் புஷ்ப கண்டம் ஆகிய பகுதிகளில் 12 வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி பூத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2006 ஆகஸ்ட் மாதத்தில் ராஜமலையில் குறிஞ்சி பூத்தது. அப்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதைப் பார்ப்பதற்கு மூணாறில் குவிந்தனர். இதன்பின்னர் 2018ல் ராஜமலையில் மீண்டும் குறிஞ்சி பூத்தது. அப்போது 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குறிஞ்சியை ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கனமழை பெய்ததால் யாராலும் குறிஞ்சியை ரசிக்கச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் தோண்டிமலை பகுதியில் உள்ள 3 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் குறிஞ்சி பூத்தது.

இதைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முதலில் மூணாறில் குவிந்தனர். ஆனால் தற்போது கொரோனா அச்சம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இதையடுத்து குறிஞ்சிப் பூக்களைப் பார்க்கச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் குறிஞ்சி பூத்துள்ள பகுதிகள் தற்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

You'r reading மூணாறில் குறிஞ்சி பூத்தது ரசிக்கத்தான் யாரும் இல்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உயிர்கொல்லியாக மாறி வரும் சானிட்டைசர் மேலும் தகவல்களை பார்க்கலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்