லடாக் மோதலுக்கு இடையே சீன அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு..

Rajnath Singh meeting the Chinese Defence Minister General Fenghe in Moscow.

ரஷ்யாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் விய் பென்ஹியை சந்தித்துப் பேசினார்.ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத்சிங் சென்றுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு இடையே அவர் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் விய் பென்ஹியை சந்தித்துப் பேசினார்.

லடாக் எல்லையில் இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் புகுந்து ஆக்கிரமித்து வருகிறது. இதனால், எல்லையில் இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், இருநாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இருநாட்டு அதிகாரிகளும் பங்கேற்றனர். இருதரப்பிலும் எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:உலக நாடுகளின் பாதுகாப்பு விஷயத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான வெளிப்படையான தீர்வுகளைக் காண்பதற்கு இந்தியா உறுதியாக உள்ளது.உலக மக்கள்தொகையில் 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு, சர்வதேச சட்டங்களை மதித்து நடப்பது, சகநாடுகளின் இறையாண்மையை மதிப்பது போன்றவை அவசியமாகும்.
பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், சர்வதேச குற்றங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கு நாடுகளிடையே தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆப்கனிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கிறது. அந்நாட்டு மக்களின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அமைதிக்காக வருடாந்திர பயிற்சிகளை நடத்தும் ரஷ்ய அமைப்பிற்கு இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

You'r reading லடாக் மோதலுக்கு இடையே சீன அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்.. தமிழக அரசு புதுச்சட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்