காவலாளியை கொன்ற வழக்கு, பிரபல ஈரான் மல்யுத்த வீரர் தூக்கிலடப்பட்டார்

Iran Executes Wrestler naveed, Olympic Body Expresses Shock Amid Global Out cry

காவலாளியை கொன்ற வழக்கில் பிரபல ஈரான் நாட்டு மல்யுத்த வீரர் நவீத் தூக்கிலிடப்பட்டார். ஈரானின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த 2018ல் ஈரானில் அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் குடிநீர் விநியோகத் துறை பாதுகாவலரான ஹசன் துர்க்மான் என்பவரும் கொல்லப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக ஈரானின் சர்வதேச மல்யுத்த வீரரான நவீத் அப்காரி (27) மற்றும் அவரது 2 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். நவீத் பிரசித்தி பெற்ற கிரீக்கோ ரோமன் மல்யுத்த போட்டியில் சிறந்த வீரர் ஆவார். நவீத் மற்றும் அவரது சகோதர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் நவீதுக்கு மரண தண்டனையும், சகோதரர்களில் ஒருவரான வஹீத் என்பவருக்கு 54 வருடங்களும், ஹபீப் என்பவருக்கு 27 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மல்யுத்த வீரர் நவீதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மனித உரிமை ஆர்வலர்களும், விளையாட்டு வீரர்களும் ஈரானின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உலகம் முழுவதும் உள்ள 85,000 விளையாட்டு வீரர்கள் சேர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஈரான் அரசு அதை ஏற்க மறுத்து விட்டது. நவீத் தவறு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறி அவரது வாக்குமூலத்தின் வீடியோவையும் ஈரான் அரசு வெளியிட்டது. ஆனால் ஈரான் போலீசார் நவீதை சித்திரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.


இந்நிலையில் மல்யுத்த வீரர் நவீத் தூக்கிலிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை நிராகரித்தது மனிதாபிமானமற்ற செயல் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. நவீதை ரகசியமாக தூக்கில் போட்ட ஈரான் அரசின் நடவடிக்கை கோழைத்தனமானது என்று சர்வதேச ஆம்னஸ்டி நிறுவனமும் வேதனை தெரிவித்துள்ளது.

You'r reading காவலாளியை கொன்ற வழக்கு, பிரபல ஈரான் மல்யுத்த வீரர் தூக்கிலடப்பட்டார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரோட்டில் கிடந்த 40 லட்சம் நகை, 10 லட்சம் பணம், போலீசில் ஒப்படைத்த இந்தியருக்கு பாராட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்