மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மாணவி நீட் தேர்வு எழுதினார்

Girl from munnar attend Neet exam

மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 82 தோட்டத் தொழிலாளிகள் மண்ணோடு புதைந்தனர். இந்த கோர சம்பவத்தில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இன்னும் 4 பேரை காணவில்லை. இந்த சம்பவத்தில் கணேசன் என்பவரும், அவரது மனைவி தங்கமும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கணேசனுக்கு ஹேமலதா (18), கோபிகா (15) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே நன்றாக படிப்பவர்கள். இதனால் இருவரையும் கணேசன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் தனது சகோதரி மகள் லேகாவிடம் அனுப்பி வைத்தார். அவர் ஹேமலதாவையும் கோபிகாவையும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்தார். சிறுவயது முதலே ஹேமலதாவுக்கும், கோபிகாவுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவாக இருந்து வந்தது. கணேசனுக்கும் தங்கத்திற்கும் கூட அது தான் கனவாக இருந்தது. இதனால் தான் இருவரையும் நன்றாக படிக்க வைக்க கணேசன் மூணாறிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதுவதற்காக ஹேமலதா தயாராகி வந்தார். அப்போது தான் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கணேசனும், தங்கமும் உள்பட ஹேமலதாவின் 21 உறவினர்கள் இறந்தனர். அந்த சமயத்தில் கோபிகாவும், ஹேமலதாவும் திருவனந்தபுரத்தில் இருந்தால் அந்த விபத்திலிருந்து இருவரும் உயிர் பிழைத்தனர். நிலச்சரிவில் தனது பெற்றோர் உட்பட உறவினர்கள் அனைவரும் இறந்த போதிலும் டாக்டர் ஆகும் கனவை ஹேமலதா கைவிடவில்லை. இதன்படி நேற்று இவர் கோட்டயத்தில் உள்ள உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வை எழுதினார்.நிலச்சரிவு நடந்த பின்னர் இதுவரை ஹேமலதாவும், கோபிகாவும் அங்கு செல்லவில்லை. தாங்கள் ஓடி விளையாடிய அந்த இடத்தின் தற்போதைய பரிதாப நிலையை பார்க்க அவர்களுக்கு மனம் வரவில்லை. ஹேமலதாவின் பெற்றோர் இறந்து நாளை 41 நாள் ஆகிறது. இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.

You'r reading மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மாணவி நீட் தேர்வு எழுதினார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. சூர்யா மீது நடவடிக்கை கோரிய ஐகோர்ட் நீதிபதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்