தங்க கடத்தல் வழக்கு கேரள அமைச்சரிடம் என்ஐஏ விசாரணை

NIA grills kerala minister jaleel in gold smuggling case

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் இன்று என்ஐஏ விசாரணை நடத்தி வருவது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அமீரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளரான ஐ ஏ எஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள முதல்வர் அலுவலகம் உட்படப் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விசாரணையில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீலுக்கும், ஸ்வப்னா சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் இவர் அமீரக தூதரகத்துடன் சட்டத்தை மீறி தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது பெயரில் துபாயில் இருந்து தூதரக பார்சல் வழியாக குர்ஆன் நூல்கள் கொண்டுவரப்பட்டன. அந்த பார்சலில் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் கடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறையினர் 2 முறை விசாரணை நடத்தினர். இதற்குப் பிறகு என்ஐஏவும் ஜலீலிடம் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிரடியாக அமைச்சர் ஜலீலிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ நோட்டீஸ் கொடுத்தது.

இதையடுத்து இன்று காலை 6 மணியளவில் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஜலீல் ஆஜரானார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கேரளாவில் அமைச்சர் ஜலீல் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் அமைச்சர் ஜலீலை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் கேரள அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

You'r reading தங்க கடத்தல் வழக்கு கேரள அமைச்சரிடம் என்ஐஏ விசாரணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமலை வைத்து சிரிக்க சிரிக்க படம் இயக்கிய பிரபல இயக்குனர் கொரோனாவால் பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்