1,500 கோடி பாப்புலர் நிதி நிறுவன மோசடி உரிமையாளர் குடும்பமே சிறையில் அடைப்பு

Popular finance fraud, all 5 members of family remanded

தமிழ்நாடு, கேரளா உள்பட மாநிலங்களில் ₹1500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, 3 மகள்கள் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. நாளடைவில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றதால் இந்த நிறுவனம் கேரளா முழுவதிலும், பின்னர் மெதுவாகத் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்கியது.

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் இந்த நிதி நிறுவனத்திற்கு 250க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டத்தில் கிளைகள் உள்ளன.இந்த நிதி நிறுவனத்தில் சாதாரண அடித்தட்டு மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து முதலீடு செய்து ஏமாந்த பலர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராய் டானியல் என்ற தாமஸ் டேனியல், அவரது மனைவி பிரபா தாமஸ், மகள்களான டாக்டர் ரினு மரியம் தாமஸ், டாக்டர் ரீபா தாமஸ் மற்றும் ரியா மரியம் தாமஸ் ஆகியோர் தலைமறைவானார்கள். இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர்.இவர்களில் ரினு மரியம் தாமஸ் மற்றும் ரீபா தாமஸ் ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது டெல்லி விமான நிலையத்தில் வைத்துப் பிடிபட்டனர். இதன்பின்னர் தாமஸ் டேனியல், அவரது மனைவி பிரபா தாமஸ் ஆகியோர் கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரியில் வைத்துப் பிடிபட்டனர்.

இந்நிலையில் இன்னொரு மகளான டாக்டர் ரியா தாமஸ் போலீசுக்குப் பிடிகொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று போலீசார் இவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் ரியா தாமசை போலீசார் திருவனந்தபுரம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதையடுத்து பாப்புலர் நிதி நிறுவன மோசடியில் உரிமையாளர் குடும்பமே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் சேர்ந்து திட்டமிட்டு இதுவரை ₹1,500 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த நிதி நிறுவனத்தில் பலர் பெருமளவு கறுப்புப் பணத்தை முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்திற்கு யாரும் உரிமை கொண்டாட மாட்டார்கள் என தெரிந்து தான் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு பணத்துடன் தலைமறைவாகத் திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

You'r reading 1,500 கோடி பாப்புலர் நிதி நிறுவன மோசடி உரிமையாளர் குடும்பமே சிறையில் அடைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் 13 சீசனில் மாற்றப்பட்டுள்ள விதிமுறைகள் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்