எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.. வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..

President RamNath Kovind gives assent to three farm bills.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, அவற்றில் திருத்தங்களைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்பவும் வலியுறுத்தின. அதை அரசு தரப்பில் ஏற்கவில்லை.

இதையடுத்து, மசோதாக்கள் மீது டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்கைப் பிடித்து இழுத்து உடைக்க முயற்சித்தனர். விதி புத்தகங்களைக் கிழித்து வீசியெறிந்தனர். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரையன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத்நாசர் ஹுசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கட்சியின் கே.கே.ராஜேஷ், எலமரம் கரீம், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் ஆகிய 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது விதிகளை மீறி குரல் வாக்கெடுப்பு நடத்தியதாகத் துணைத் தலைவர் மீதும், அரசு மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தன. இதன்பின், எதிர்க்கட்சிகளின் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், மாநிலங்களவை விதிப்படி ஒரு உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, டிவிஷன் வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும். ஆனால், மாநிலங்களவை துணைத் தலைவர் குரல் வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே, அந்த வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கோரப்பட்டது.

மேலும், இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் பாஜக கூட்டணியில் இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார். அந்த கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று(செப்.27) மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் அலுவலக மொழிகள் திருத்தச் சட்ட மசோதாக்களுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார்.

You'r reading எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.. வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாமக்கல், நீலகிரி மாவட்டங்களிலும் கொரோனா பரவுகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்