நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு கேரளாவில் மீண்டும் லாக் டவுன்?

Covid patients increasing in kerala, planning to implement lock down again

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தொடர்ந்து மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருந்தது.

ஆனால் கடந்த மே மாதம் முதல் நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரம் முதன்முதலாக நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், பின்னர் 6 ஆயிரத்தையும், தற்போது 7 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று 7,445 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல நோய் பாதித்து மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் வரை தினசரி 4 அல்லது 5 பேர் மட்டுமே மரணமடைந்து வந்தனர். ஆனால் தற்போது தினமும் 20 பேருக்கு மேல் மரணமடைகின்றனர். கடுமையான நிபந்தனைகளைப் பின்பற்றி வருகின்ற போதிலும் நோயாளிகளின் எண்ணிக்கையும், மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கேரள சுகாதாரத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. மீண்டும் முழு லாக் டவுனை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் லாக் டவுனை அமல்படுத்தலாமா அல்லது நோய் தீவிரம் அதிகமுள்ள பகுதியில் மட்டும் கடும் நிபந்தனைகளைக் கொண்டு வரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

You'r reading நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு கேரளாவில் மீண்டும் லாக் டவுன்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் பயங்கர தீ... 16 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்