கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா நாளை முதல் 144 தடை உத்தரவு!!!

Corona rising in Kerala 144 ban orders again

கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை முதல் இம்மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் 5 ஆயிரத்தை கடந்த தினசரி நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நேற்று முன்தினம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 8,830 ஆக இருந்தது. நேற்று 8,135 ஆகவும் இருந்தது. அடுத்தடுத்து 2 நாட்களில் நோயாளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக சமீபத்தில் திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நோய் பரவலை தடுப்பதற்காக நிபந்தனைகளை கடுமையாக அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நாளை முதல் கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. 5 பேருக்கு மேல் கூடும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது. திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

இறுதிச்சடங்கில் அதிகபட்சமாக 25 பேரும் கலந்து கொள்ளலாம். கடைகள் அனைத்தும் வழக்கம்போல இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அலுவலகங்களுக்கு ஒன்றாக செல்வதற்கும், பஸ் உட்பட வாகனங்களுக்கு காத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லை. நாளை காலை 9 மணி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த தடை உத்தரவு நிபந்தனைகளை கடுமையாக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரளாவில் தற்போது சூழ்நிலையில் இம்மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

You'r reading கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா நாளை முதல் 144 தடை உத்தரவு!!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பஞ்சாப்பை புரட்டி எடுத்த மும்பை !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்