நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோவைக்கு 2வது இடம்...!

Coimbatore records 2nd in womens safest cities in india

நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோயம்புத்தூருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட மாநிலங்கள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் முன்னணியில் உள்ளது.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உத்திர பிரதேச மாநில அரசும், அம்மாநில போலீசும் அநீதி இழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் 19 முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் முதலிடத்தில் இருப்பது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆகும்.இந்த நகரத்தில் தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவாக நடந்துள்ளது. பலாத்காரம், பாலியல் சீண்டல் ஆகிய குற்றங்களும் இங்கு மிகக் குறைவு தான்.

கொல்கத்தாவை விட்டால் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் 2வது இடத்தில் இருப்பது நம்ம கோயம்புத்தூர் ஆகும். கோவையிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் குறைவாகும். இதற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் பாட்னா உள்ளது.கடந்த வருடம் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 12,900 குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் முதலிடத்தில் இருப்பது உத்திர பிரதேச மாநிலம் ஆகும். கடந்த வருடத்தில் இந்த மாநிலத்தில் 59,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 41,550 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 37,144 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டுக் கணக்கின் படி இந்தியா முழுவதும் ஒரு நாளில் 87 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் பேரில் 4,05,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டை விட இது 7 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோவைக்கு 2வது இடம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிளாஸ்மா சிகிச்சை பிரயோஜனமில்லையாம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்