தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வாக்குமூலத்தை வெளியிட்டால் முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்பு?

Trivandrum gold smuggling case, customs against swapnas plea

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சுங்க இலாகா கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலில் சுங்க இலாகா வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதன் பின்னர் மத்திய அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது. இந்த மூன்று மத்திய குழுக்களின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இந்த தங்க கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள முதல்வர் அலுவலகத்தில் தொடங்கி அனைத்து முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம் மட்டுமில்லாமல் மத்திய அமலாக்கத் துறை காபிபோசா சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷை சுங்க இலாகா உள்பட 3 விசாரணை குழுக்களும் காவலில் எடுத்தும், சிறையில் வைத்தும் பலமுறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் தன்னுடைய திட்டத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது என்பது உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சுங்க இலாகாவிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தின் நகலை தன்னிடம் வழங்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுங்க இலாகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து சுங்க இலாகா சார்பில் அதன் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியது: வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் நகலை கேட்க சட்டத்தில் இடம் கிடையாது. இதை உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் மோசடியில் ஈடுபட்ட பல முக்கிய பிரமுகர்கள் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் செல்வாக்கு உள்ளது. எனவே அவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டால் அந்த முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது. அவர்களை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் நகலை அவருக்கு கொடுக்க முடியாது என்று கூறினார். திருவனந்தபுரம் தங்க கடத்தலில் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சுங்க இலாகா கூறியிருப்பது இந்த வழக்கில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வாக்குமூலத்தை வெளியிட்டால் முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்பு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொளந்து கட்டிய பெங்களூர்!செல்ஃப் எடுக்காத சென்னை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்