கேரளாவில் கடற்கரைகள் தவிர சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறப்பு.

Tourist destinations in Kerala will be open from tomorrow

கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் நாளை முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு நவம்பர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடக்கின்றன. கடற்கரைகள், மிருகக்காட்சி சாலைகள், மலைவாச தலங்கள் உள்பட அனைத்து சுற்றுலா மையங்களும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன. கேரளாவுக்கு சுற்றுலா மூலம் தான் பெரும்பான்மையான வருமானம் கிடைக்கிறது. திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவளம் கடற்கரை, ஆலப்புழா படகு இல்லம், மூணாறு உள்பட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்கள் கேரளாவில் உள்ளன. இங்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் கேரள அரசுக்கு பல ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லாக்டவுன் நிபந்தனைகளில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி சுற்றுலா மையங்கள், தியேட்டர்கள் உள்பட பொழுதுபோக்கு மையங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் நாளை முதல் கடற்கரைகள் தவிர மற்ற சுற்றுலா தலங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியது: கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை முதல் திறக்கப்படும். கடற்கரைகளில் நவம்பர் 1ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நிபந்தனைகளை பின்பற்றியே சுற்றுலா மையங்களில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 7 நாள் வரை கேரளாவில் தங்கலாம். 7 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்களது சொந்த செலவில் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கேரள அரசின் கோவிட் ஜாக்ரதா இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 7 நாட்களுக்கு மேல் கேரளாவில் தங்க விரும்புவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றுகளுடன் வரவேண்டும். இல்லாவிட்டால் கேரளாவில் வந்து கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading கேரளாவில் கடற்கரைகள் தவிர சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறப்பு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நில அபகரிப்பை தடுக்க மத்திய அரசின் ஸ்வமித்கா திட்டம் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்