தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா வீட்டில் வந்து சந்தித்தது ஏன்? பினராயி விஜயன் தகவலால் பரபரப்பு.

I know swapna suresh very well, pinarayi vijayan

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தன்னை வீட்டில் பலமுறை வந்து சந்தித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமீரக துணைத் தூதரின் முன்னாள் நிர்வாக செயலாளரான ஸ்வப்னா சுரேஷுக்கு முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல முக்கிய தலைவர்களுடனும், உயரதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று தகவல் வெளியானது. இவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தொடக்க காலகட்டத்தில் சுங்க இலாகா எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் முதல்வர் பினராயி விஜயனுக்கு ஸ்வப்னாவை நன்றாக தெரியும் என்றும், பல முறை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேட்டபோது, தனக்கு ஸ்வப்னா என்றால் யார் என்றே தெரியாது என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்வப்னாவின் வாக்குமூலத்தை சுங்க இலாகா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் முதல்வர் பினராயி விஜயனை அமீரக துணைத் தூதர் பலமுறை வீட்டுக்கு சென்று தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதாகவும், அப்போது தானும் உடன் இருந்ததாகவும் ஸ்வப்னா கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலில் ஸ்வப்னாவை தனக்கு தெரியவே தெரியாது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறிய நிலையில், பல முறை ஸ்வப்னா அவரை சந்தித்ததாக வாக்குமூலத்தில் கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமீரக துணைத் தூதர் பல முறை என்னை வீட்டில் வந்து சந்தித்துப் பேசியது உண்மை தான். அப்போது ஸ்வப்னாவும் உடன் இருந்தார். அவரை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறினார். பினராயி விஜயனின் இந்த திடீர் பல்டி கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா வீட்டில் வந்து சந்தித்தது ஏன்? பினராயி விஜயன் தகவலால் பரபரப்பு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெள்ளரிக்காயில் ரொட்டியும் செய்யலாம் ட்ரை பண்ணி பாருங்க.. அப்புறம் அசந்துடுவிங்க!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்