சீனாவின் கடும் நிர்ப்பந்தம் பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திடீர் நீக்கம்

Tik tok ban removed in Pakistan amid chinese pressure

டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அந்தத் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. சீனாவின் கடும் நிர்ப்பந்தம் காரணமாகவே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் பல செயலிகளை தற்போது பெரும்பாலான நாடுகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்துக்கொண்டிருக்கிறது. உளவு பார்ப்பதற்காகவே பல செயலிகளை சீனா அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, சீனா இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவை பழிவாங்க முடிவு செய்த இந்தியா, உலகளவில் பிரசித்தி பெற்ற டிக்டாக், பப்ஜி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சீனாவின் செயலிகளுக்கு தடை விதித்தது.

இந்தியா, சீனாவின் மிகப் பெரிய சந்தை ஆகும். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது சீனாவுக்கு கடும் பொருளாதார இழப்பை கொடுத்தது. டிக் டாக் உள்பட செயலிகளுக்கு தடை விதித்ததற்கு இந்தியாவுக்கு சீனா நேரடியாகவே கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் டிக் டாக் உள்பட சீனாவின் செயலிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தானிலும் கடந்த 10 நாட்களுக்கு முன் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. சீனாவும், பாகிஸ்தானும் நேச நாடுகள் ஆகும். இந்நிலையில் பாகிஸ்தான் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது உலக நாடுகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சீனாவுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சீனா நிர்பந்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக இன்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

You'r reading சீனாவின் கடும் நிர்ப்பந்தம் பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திடீர் நீக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதலில் அப்பா, பிறகு மகன்.. பாடகியை வன்கொடுமை செய்த எம்எல்ஏ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்