தங்க கடத்தல் வழக்கு கேரள ஐஏஎஸ் அதிகாரியை 28ம் தேதி வரை கைது செய்யக்கூடாது.

Kerala HC to declare verdict on anticipatory bails on sivasankar

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 28ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரிடம் இந்த மூன்று விசாரணை அமைப்புகளும் பல நாட்கள் 90 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியும் எந்த முக்கிய ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனாலும் சிவசங்கரை கைது கைது செய்ய இந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிவசங்கரை கைது செய்யும் எண்ணத்தில் சுங்க இலாகா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றது. ஆனால் இதை மோப்பம் பிடித்த அவர், தனக்கு உடல் நலம் இல்லை என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடியே முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடந்தது. ஏற்கனவே மத்திய அமலாக்கத்துறையின் கைதில் இருந்து தப்பிக்கவும் சிவசங்கர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனு மீதும் இன்று விசாரணை நடந்தது.

அப்போது இரு தரப்பினர் இடையேயும் காரசார வாதம் நடந்தது. தங்க கடத்தலில் சிவசங்கருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும், ஸ்வப்னாவுக்கு எல்லா உதவிகளும் சிவசங்கர் செய்து வந்தார் என்றும் மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால் அதை மறுத்த சிவசங்கர் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 3 விசாரணை அமைப்புகளும் 90 நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியும் சிவசங்கருக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்குகளால் சிவசங்கரின் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் பலமுறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அரசியல் ரீதியாக அவரை பழி வாங்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் 28ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்யக்கூடாது என்றும், அன்று முன் ஜாமீன் மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

You'r reading தங்க கடத்தல் வழக்கு கேரள ஐஏஎஸ் அதிகாரியை 28ம் தேதி வரை கைது செய்யக்கூடாது. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்... முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்