பல மாதங்களாக பொதுமக்களை பயமுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.

Tiger caught in trap in kerala

கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளது புல்பள்ளி என்ற கிராமம். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஆகும். அடிக்கடி இந்த கிராமத்திற்குள் யானை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது வழக்கம். இதே போலத்தான் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு புலி திடீரென ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஒரு வீட்டு தொழுவத்தில் இருந்த மாட்டை அடித்துக் கொன்றது. ஒரு சில நாட்களில் மீண்டும் இந்த புலி ஊருக்குள் புகுந்து ஒரு பன்றி பண்ணைக்குள் வந்து பன்றிகளையும் அடித்துக் கொன்று சாப்பிட்டது. இதையடுத்து அந்த கிராமத்தினர் கடும் பீதியடைந்தனர். இரவில் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனைவரும் அஞ்சினர்.

இதையடுத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். சாலை மறியலும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் புலியை பிடிப்பதற்காக அப்பகுதியில் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் புலி சிக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் வேறு ஒரு பகுதியில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அந்த கூண்டுக்குள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது. அது 9 வயதான ஒரு பெண் புலியாகும். இது குறித்து அறிந்ததும் வனத்துறையினரும், வனத்துறை டாக்டரும் அங்கு விரைந்து சென்றனர். புலியை பரிசோதித்த பின்னரே அதை காட்டுக்குள் விடுவதா அல்லது மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். புலிக்கு காயம் ஏதும் இருந்தால் சிகிச்சை அளித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

You'r reading பல மாதங்களாக பொதுமக்களை பயமுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா கிலோ என்ன விலை? மாஸ்கும் இல்லை, சமூக அகலமும் கிடையாது பீகாரில் தேர்தல் பேரணிகளில் குவியும் மக்கள்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்